அதிகாரி பணிக்கு வராததை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

அதிகாரி பணிக்கு வராததை கண்டித்து ஆடலூர் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-05-29 22:00 GMT
கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் ஆடலூர் ஊராட்சி அமைந்துள்ளது. ஆடலூர் மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், பிறப்பு, இறப்பு, பட்டா, சிட்டா உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற வேண்டும் என்றால் ஆடலூர் கிராம நிர்வாக அலுவலகத்திலேயே விண்ணப்பிக்க வேண்டும்.

இங்கு கிராம நிர்வாக அதிகாரியாக செந்தில்குமார் என்பவர் உள்ளார். இவர் சரிவர பணிக்கு வருவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேல் அவர் பணிக்கு வராமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆடலூர் பகுதி மக்கள் பணிக்கு வராத அதிகாரியை கண்டித்து நேற்று ஆடலூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் போராட்டம் குறித்த தகவலறிந்த ஆடலூர் ஊராட்சி செயலாளர் இன்னாசி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம நிர்வாக அதிகாரி முறையாக பணிக்கு வராததால் எங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற முடியாமல் தவிக்கிறோம். மேலும் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ-மாணவிகளுக்கான வருமான சான்று, சாதிச்சான்று ஆகியவற்றை பெற முடியவில்லை.

இதனால் எங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் கிராம நிர்வாக அதிகாரி பணிக்கு வராததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி நாளை (அதாவது இன்று) பணிக்கு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்