கடலூர் பெரியார் அரசு கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு

கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது.

Update: 2019-05-30 23:00 GMT
கடலூர், 

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதில் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் கடலூர் மட்டுமின்றி விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட வெளியூர் மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர் ராஜ்குமார் தலைமையிலான பேராசிரியர்கள் நேர்காணல் நடத்தி மதிப்பெண் மற்றும் அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்தனர்.

பின்னர் இது குறித்து முதல்வர் ராஜ்குமார் கூறும்போது, கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல் உள்ளிட்ட 16 வகையான பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,200 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்காக 6 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. அதில் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களை பகுதி பகுதியாக அழைத்து கலந்தாய்வு நடத்தி மதிப்பெண் மற்றும் அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்துள்ளோம். விண்ணப்பத்தில் சரியான தகவல்கள் இல்லாதது போன்ற காரணங்களால் மட்டுமே குறிப்பிட்ட சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு இன்றுடன்(நேற்று) முடிவடைகிறது. 2-வது கட்ட கலந்தாய்வு வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது என்றார். 

மேலும் செய்திகள்