தாகம் தணிக்க செல்லும்போது தவறி விழும் அவலம், வனவிலங்குகளை உயிர்பலி வாங்கும் தண்ணீர் தொட்டிகள் - மாற்றி அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கோவை வனப்பகுதியில் தாகம் தணிக்க அமைக்கப்பட்ட தண்ணீர்தொட்டிகள், வனவிலங்குகளை உயிர்பலி வாங்கும் நிலையில் உள்ளன. ஆகவே அவற்றை மாற்றி அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-05-31 23:00 GMT
கோவை,

கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், போளுவாம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

வனப்பகுதியில் வறட்சி ஏற்படும்போது இந்த வனவிலங்குகள் குடிநீருக்காக மலையடிவார பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதைத்தடுக்க அடர்ந்த வனப்பகுதியில் வனத் துறை சார்பில், 65 குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன.

இதில் பெரும்பாலான தொட்டிகளை வனத்துறையினர் முறையாக பராமரிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொட்டிகளில் அதிகளவில் பாசிகள் படர்ந்து இருப்பதால் தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகள் அவற்றில் வழுக்கி விழுந்து இறக்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொட்டிகள் அனைத்துமே வனவிலங்குகள் உள்ளே இறங்கி தண்ணீர் குடிக்கும் வகையில் இருக்கிறது. இதற்காக குடிநீர் தொட்டிகளின் இருபுறத்திலும் சாய்வு தளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் சாய்வுதளத்தில் பாசி படர்ந்து விடும்.

இதனால் இந்த தொட்டிகளை வாரத்துக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் மாதத்துக்கு ஒருமுறை கூட வனத்துறையினர் சுத்தம் செய்வது கிடையாது. அதுபோன்று சரிவர தண்ணீரும் நிரப்புவது இல்லை. இதனால் சாய்வுதளம் முழுவதும் பாசி படர்ந்து இருக்கிறது.

6 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிகளில் முழுவதும் தண்ணீர் நிரப்பும்போது உள்ளே வன விலங்குகள் இறங்கினால் வழுக்கினாலும் கீழே விழாது. ஆனால் 2 அடி மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இதனால் தண்ணீர் குடிக்க வனவிலங்குகள் உள்ளே இறங்கும்போது வழுக்கி தண்ணீர் தொட்டிக்குள்ளேயே விழுந்து விடும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

கடந்த வாரத்தில் கூட ஆனைக்கட்டி வனப்பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த காட்டெருமை குட்டி ஒன்று இதுபோன்ற குடிநீர் தொட்டிக்குள்தான் தவறி விழுந்து இறந்தது. அதன் பின்னரும் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வனத்துறையினர் முன்வரவில்லை.

தற்போது அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தொட்டி அனைத்தும் வனவிலங்குகள் உள்ளே இறங்க முடியாதவாறு அமைக்கப்பட்டு வருவதால் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் வனவிலங்குகள் உள்ளே இறங்க வசதியாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை முறையாக பராமரிப்பது வனத் துறையின் கடமை அல்லவா?. பின்னர் ஏன் அவர்கள் அதை பராமரிப்பது இல்லை என்பது தெரிய வில்லை.

எனவே வனத்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் கவனித்து, இதுபோன்ற சாய்வுதளம் கொண்ட குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் அதை மாற்றி அமைக்க வேண்டும். மாற்றாவிட்டால் இவை வனவிலங்குகளை உயிர்பலி வாங்கும் தொட்டிகளாக விளங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்