திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு, ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபர் - கொலையா? போலீஸ் விசாரணை

திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-31 22:15 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு புதிதாக அமைக்கப்பட்டிருந்த புல் தரையின் அருகில் நேற்று காலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய சட்டை கிழிந்த நிலையில் இருந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த போது, வாலிபர் கிடக்கும் இடம் திண்டுக்கல் வடக்கு போலீசாரின் எல்லைக்குட்பட்ட பகுதி என கருதினர்.

இதையடுத்து வடக்கு போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட போலீசார் அது, தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதி அல்ல என கூறிவிட்டு சென்றனர். எல்லைப்பிரச்சினை காரணமாக சில மணி நேரம் அந்த வாலிபரின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது யார்? என்ற பிரச்சினை ஏற்பட்டது.

பின்னர் ஒருவழியாக ரெயில்வே போலீசாரே அந்த வாலிபரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?.

அவரை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது விபத்தில் சிக்கி இறந்த அவரை ரெயில் நிலையம் முன்பு யாரேனும் போட்டுச்சென்றனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்