பொள்ளாச்சியில், பிரசவத்தின்போது அரசு பள்ளி ஆசிரியை சாவு

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது ஆசிரியை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-06-01 22:45 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). இவரது மனைவி கோகிலா (35). இவர் நேதாஜி ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு விஷ்ணுகா (8) என்கிற மகள் உள்ளார். இந்த நிலையில் கோகிலா மீண்டும் கர்ப்பமானார்.

இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக ஜமீன்ஊத்துக்குளி செல்லமுத்து நகரில் உள்ள பெற்றோர் வீட்டில் கோகிலா வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அவர் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார். உடனே பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர் ரத்த போக்கு அதிகமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அவரை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கோகிலாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்த போக்கு அதிகமாகி ஆபத்தான நிலையில் இருப்பதால் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். மேலும் 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. ஆனால் கோகிலாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் ஆம்புலன்சில் கோவைக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கோகிலாவை காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் கணவர் மணிகண்டன் புகார் கொடுத்தார். மேலும் கோகிலாவின் உடல் பிரேத பரிசோதனை செய்து, உடல் உறுப்புகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-

நிறைமாத கர்ப்பிணியாக கோகிலாவுக்கு நஞ்சுக்கொடி கர்ப்பபை பகுதியில் உள்ள தசையில் சிக்கி இருந்தது. இதற்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்று உள்ளார். இதற்கிடையில் அவருக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்ட நிலையில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் கோவைக்கு அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் காரணமாக பொள்ளாச்சியில் சிகிச்சை அளித்து குழந்தையின் உயிரை மட்டும் காப்பாற்ற முடிந்தது. இதே கோவைக்கு அனுப்பி வைத்தி இருந்தால் குழந்தையின் உயிரையும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும். தற்போது குழந்தை நல்ல முறையில் உள்ளது. 1½ மாதத்திற்கு முன்பாக குழந்தை பிறந்ததால் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்