சேலம் மாநகராட்சியில் 5 மாதங்களில் 11 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.9.68 லட்சம் அபராதம் வசூல்

சேலம் மாநகராட்சியில் கடந்த 5 மாதங்களில் 11 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-06-01 22:15 GMT
சேலம், 

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனை தொடர்ந்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீ‌‌ஷ் உத்தரவின்பேரில் இக்கண்காணிப்பு குழுவினரால் 2.1.2019 முதல் 31.5.2019 வரையிலான 5 மாதங்களில் சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இனிப்பகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், மொபைல் கடைகள், தேநீர் விடுதிகள், துணிக்கடைகள், உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் திடீர் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

அதன் அடிப்படையில் சூரமங்கலம் மண்டலத்தில் 706 கடைகளில் 3 ஆயிரத்து 181 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 850 அபராதமும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 543 கடைகளில் 1,083 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 800 அபராதமும், அம்மாபேட்டை மண்டலத்தில் 856 கடைகளில் 4 ஆயிரத்து 434 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 800 அபராதமும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 827 கடைகளில் 2 ஆயிரத்து 368 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 250 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதாவது 4 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 2,932 கடைகளில் 11 ஆயிரத்து 66 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.9 லட்சத்து 68 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என ஆணையாளர் சதீ‌‌ஷ் தெரிவித்துள்ளார்.


மேலும், இக்காண்காணிப்பு குழுவினர் தினமும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் தடுக்க தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வார்கள் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்