வயலூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

வயலூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-06-02 22:45 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலூர் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு, அதே கிராமத்தில் ஊராட்சி மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீரின்றி காணப்படுகிறது. இதனால் வயலூர் கிராம மக்களுக்கு கடந்த 7 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் குடிநீர் கேட்டு, நேற்று வயலூர்–அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் மற்றும் குன்னம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


அப்போது கிராம மக்கள், எங்கள் ஊரில் உள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், தற்போது உங்களுக்கு தினமும் டிராக்டரில் குடிநீர் வழங்கப்படும். சில நாட்களில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்