புதுவை சட்டசபையின் சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு

புதுவை சட்டசபையின் சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.

Update: 2019-06-02 23:15 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பினை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் கடந்த 1-ந்தேதி வெளியிட்டார்.

அவர் தனது அறிவிப்பில் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்காக புதுவை சட்டசபை வருகிற 3-ந்தேதி (இன்று) கூடுவதாகவும், அப்போது சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்கு எதிர்க் கட்சிகளிடையே எதிர்ப்பு கிளம்பியது. குறுகிய கால இடைவெளியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜனநாயக படுகொலை நடந்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களின் கூட்டமும் நடந்தது. கூட்டத்தின் முடிவில் தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என்று கவர்னர், சட்டசபை செயலாளருக்கு மனு அளிக்கப்பட்டது.

இதற்கிடையே புதிய சபாநாயகர் பதவியை பெற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களுக் குள் போட்டி ஏற்பட்டது. துணை சபாநாயகரான சிவக்கொழுந்து, முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

இந்தநிலையில் துணை சபாநாயகரான சிவக்கொழுந்து சபாநாயகர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நேற்று காலை காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் முதல்-அமைச்சரின் அலுவலகத்தில் நடந்தது. அப்போது புதுவை சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியிட மனு தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஷாஜகான், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சட்டசபை செயலாளரிடம் சபாநாயகர் பதவிக்கு சிவக்கொழுந்து போட்டியிட மனு தாக்கல் செய்தனர். பின்னர் தனியாக வந்து அமைச்சர் ஷாஜகானும் சிவக்கொழுந்துவுக்காக ஒரு மனு தாக்கல் செய்தார். ஒட்டுமொத்தமாக 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வேட்புமனு தாக்கல் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே புதுவை சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வாகிறார். இதற் கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடும் சட்டமன்ற கூட்டத்தில் வெளியாகிறது. அதைத்தொடர்ந்து மரபுப்படி புதிய சபாநாயகர் சிவக்கொழுந்துவை முதல்- அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் சபாநாயகர் இருக்கையில் அமரச் செய்து வாழ்த்திப் பேசுவார்கள்.

மேலும் செய்திகள்