கன்னியாகுமரியில் சுற்றுலா பயணியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு வாலிபர் கைது

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணியிடம் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-02 22:00 GMT
கன்னியாகுமரி,

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது மனைவி தனலட்சுமி (வயது 40) மற்றும் குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்திருந்தார்.

இங்கு கடற்கரை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு, தங்கும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே அனைவரும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு வாலிபர் அவர்கள் அருகில் வந்து நின்றான்.

திடீரென அந்த வாலிபர் தனலட்சுமியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். இதனால், அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி சத்தம் போட்டார். உடனே, அருகில் நின்ற கணவரும், உறவினர்களும் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அந்த வாலிபர் அங்கு மோட்டார் சைக்கிளுடன் தயார் நிலையில் நின்ற நண்பனுடன் தப்பி சென்றான்.

இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சுற்றுலா பயணியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில், கன்னியாகுமரி பகுதியில் ரோந்து சென்ற போலீசார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, அவர் அஞ்சுகிராமம் அருகே ஜேம்ஸ் டவுனை சேர்ந்த கவுதமன் (22) என்பதும், சுற்றுலா பயணி தனலட்சுமியிடம் தங்க சங்கிலி பறித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கவுதமனை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவனது நண்பன் முத்துவை தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்