தூத்துக்குடியில் 11 பேருக்கு ரூ.13 லட்சம் உதவித்தொகை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 11 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சம் உதவித் தொகையை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

Update: 2019-06-03 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு தீருதவித் தொகையாக ரூ.12 லட்சத்து 87 ஆயிரத்து 500-க்கான காசோலை மற்றும் எட்டயபுரம் தாலுகா, தாப்பாத்தி அகதிகள் முகாமைச் சார்ந்த ஒரு பயனாளிக்கு இலங்கை தமிழர் சிறப்பு (விபத்து) நிவாரண நிதி உதவித்தொகையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையையும் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கனர் தனபதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகசுந்தரம், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்