பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி 256 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 256 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Update: 2019-06-04 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் 1428-வது பசலி ஆண்டுக்கு, வருவாய் கிராமங்களுக்கான தீர்வாய நிகழ்ச்சி (ஜமாபந்தி) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று தொடங்கியது. அதன்படி வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையிலும், ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமையிலும், பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா தலைமையிலும், குன்னம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வ நாதன் தலைமையிலும் ஜமாபந்தி நடந்தது.

வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தா, பொதுமக்களிடம் அடிப்படை வசதிகளை கேட்டறிந்து, நில அளவைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை பார்வையிட்டார். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், தகுதியான 91 பேருக்கு நத்தம் பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 5 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும் வழங்கினார்.

பெரம்பலூர் தாலுகாவில் 78 மனுக்கள் பெறப்பட்டு 48 மனுக்கள் மீதும், வேப்பந்தட்டை தாலுகாவில் 246 மனுக்கள் பெறப்பட்டு 96 மனுக்கள் மீதும், குன்னம் தாலுகாவில் 83 மனுக்கள் பெறப்பட்டு 45 மனுக்கள் மீதும், ஆலத்தூர் தாலுகாவில் 183 மனுக்கள் பெறப்பட்டு 67 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் முதல்நாள் நடந்த ஜமாபந்தியில் 590 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 256 மனுக்களுக்கு நத்தம் பட்டா மாற்றம், பட்டா நகல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. 95 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 239 மனுக்கள் விசாரணையில் உள்ளது.

மேலும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நாளை (வியாழக்கிழமை) வருவாய்த்தீர்வாயம் 2-வது நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது. நிறைவு நாளில் தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் மாநாடு அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெறும். பொதுமக்கள் இந்த வருவாய் தீர்வாயங்களில் தனிப்பட்ட கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து உடனடித்தீர்வு கண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்