ஆலங்குளம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை

ஆலங்குளம் அருகே சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-06-04 22:00 GMT
ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி, காசிநாதபுரம் ஆகிய கிராமங்களில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது சில வீட்டு குடிநீர் இணைப்புகளில் முறைகேடாக மோட்டாரை பொருத்தி, குடிநீரை உறிஞ்சுவதால் மற்ற வீடுகளுக்கு குடிநீர் சீராக கிடைப்பது இல்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களது பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும். முறைகேடாக குடிநீர் உறிஞ்சுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, புதுப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர்.

நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தினகரன், இணை செயலாளர் கவி, தொகுதி செயலாளர் முத்துராஜ், மாணவர் பாசறை சவுந்தர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். உடனே பாப்பாக்குடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே காசிநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 6 முதல் 8 வரையிலான வகுப்புகள் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் செயல்படுகிறது. அங்கு கோடை விடுமுறையில், மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்ட குடிநீர் குழாயை சீரமைத்து, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று பள்ளியின் சார்பில், புதுப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்