ரிஷிவந்தியம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

ரிஷிவந்தியம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-04 22:43 GMT

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே உள்ள காட்டுஎடையார் கிராமத்தில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறு தண்ணீர் இன்றி வறண்டதால், கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை காட்டுஎடையாரில் உள்ள ரிஷிவந்தியம்–கெடிலம் சாலைக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் வழங்க கோரி கோ‌ஷம் எழுப்பியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அதனால் குடிநீருக்காக நாங்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறோம். எனவே உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு அதிகாரிகள், உடனே புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே நேற்று மதியம் அதே பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மாலையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்