தூத்துக்குடியில், சீரான குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடியில் சீரான குடிநீர் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் நேற்று மாலையில் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-06-05 22:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அய்யப்பநகர் 2-வது தெரு பகுதியில் கடந்த 13 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்தனர். நேற்று மாலையில் அந்த பகுதிக்கு குறைந்த அளவில் தண்ணீர் வந்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் குறிஞ்சிநகர் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினர். அதை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து அந்தபகுதியில் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்