எடப்பாடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

எடப்பாடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-05 22:15 GMT
எடப்பாடி, 

எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி ஊராட்சிக்குட்பட்ட கல்லபாளையத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதகாலமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் எடப்பாடி-வெள்ளரிவெள்ளி சாலைக்கு நேற்று காலையில் திரண்டு வந்தனர்.

அங்கு அவர்கள் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், பூலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் அங்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது,‘வெள்ளரிவெள்ளி பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் குடிநீரை சிலர் முறைகேடாக பிடிப்பதால் கல்லபாளையத்திற்கு சரிவர தண்ணீர் செல்வதில்லை. அதைசரிசெய்திட உரிய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்கப்படும்' என்றார்கள். மேலும் இந்த பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதன்காரணமாக அந்த சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்