கரூர் அரசு மருத்துவமனையில் நர்சுகள் திடீர் வேலைநிறுத்த போராட்டம் நோயாளிகள் கடும் அவதி

கரூர் அரசு மருத்துவமனையில் நர்சுகள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2019-06-05 23:00 GMT
கரூர்,

கரூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை பணிக்கு வந்த நர்சுகள் திடீரென மருத்துவமனை வளாகத்தில் திரண்டு நின்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், கரூர் அரசு மருத்துவமனை நர்சுகளுக்கு பணிச்சுமையை அதிகரித்து தொல்லை கொடுப்பதாக கூறி, மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில துணை தலைவர் நல்லம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் செல்வராணி, பொருளாளர் தனலட்சுமி மற்றும் கரூர் கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து நர்சுகள் கூறுகையில், ‘உள்நோயாளிகளுக்கான ரத்த பரிசோதனை உள்ளிட்ட பணிகளை நர்சுகளை மேற்கொள்ள சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். நோயாளிகள் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு விட்டு செல்லும் போது டாக்டர்கள் அறிக்கை தர வேண்டும். அதனை எங்களை தயார் செய்ய சொல்கின்றனர். இதனால் அதில் பிழை ஏதும் ஏற்பட்டால் எங்களது பணிக்கு ஆபத்து வந்துவிடுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. இவ்வாறாக ஏற்படும் கூடுதல் வேலைப்பளுவினால் எங்களால் நோயாளிகளை சரிவர கவனிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் நோயாளிகளுக்கும், எங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு விடுகிறது. எனவே இது பற்றி உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும்’ என்றனர்.

காலை 7 மணியில் இருந்து நீண்ட நேரமாக நர்சுகள் பணிக்கு வராததால் கரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் சிரமம் அடைந்தனர். பொது அறுவை சிகிச்சை பிரிவு வார்டில், விபத்துக்குள்ளாகி சிகிச்சையில் இருக்கும் நபர்களுக்கு மருந்து போடுதல், கட்டு போடுதல் உள்ளிட்ட சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் உள்ளிட்டோர், நர்சுகளுக்கும்-மருத்துவமனை நிர்வாகத்துக்கும் இடையேயுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டு நோயாளிகளுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே அரசு டாக்டர்கள் உடனடியாக அங்கு வந்து சிகிச்சையை மேற்கொண்டனர்.

இதற்கிடையே காலையில் டீன் ரோஸி வெண்ணிலாவை சந்தித்து கோரிக்கைகள் குறித்து நர்சுகள் முறையிட்டனர். அதில் உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து நர்சுகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மருத்துவமனைக்கு கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, டீன் ரோஸி வெண்ணிலா ஆகியோர் நர்சுகளை அழைத்து பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர். பின்னர் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் மதியம் 2 மணிக்கு பணிக்கு திரும்பினர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்