விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி தொடங்குவது எப்போது? தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தேவையான நடடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-05 22:45 GMT

விருதுநகர்,

கடந்த 2011–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் விருதுநகரில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, அதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானது.

இதை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் விருதுநகரில் மருத்துவ கல்லூரி தொடங்கும் திட்டம் கைவிடப்பட்டது. இதைதொடர்ந்து முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா தென் மாவட்டங்களில் பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார். இந்த கல்லூரியை விருதுநகரில் தொடங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின.

இந்தநிலையில் கடந்த 2017–ம் ஆண்டு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி தொடக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்ததோடு, அதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தார். இதையடுத்து விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான இடத்தினை தேர்வு செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகம் அருகே உள்ள அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் பல் மருத்துவ கல்லூரி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் பல் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது.

மருத்துவ கல்லூரி இருந்தால் தான், பல் மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்படும் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்ததால் பல் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான முயற்சிகளில் முடக்கம் ஏற்பட்டது.

இருப்பினும் பல் மருத்துவ கல்லூரியை விருதுநகரில் தொடங்க இந்திய மருத்துவ கழகத்திடம் அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு சமூக சேவை சங்கங்கள் வலியுறுத்தின.

பல் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு இந்திய மருத்துவ கழகம் விதிமுறைகளில் விலக்கு அளிக்காத நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி விருதுநகரில் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து பல் மருத்துவ கல்லூரியும் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் கல்வியில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முன்வந்த நிலையில் மத்திய அரசின் நிதி உதவியுடன் விருதுநகரில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரியை தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்