நீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை மரக்காணம் அருகே சோகம்

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மரக்காணம் பகுதியை சேர்ந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-06-06 23:30 GMT
மரக்காணம், 

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 5-ந் தேதி நடந்தது. இதன் முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில் தோல்வி அடைந்ததால் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த நம்பிராஜன் மகன் வைசியா (வயது 17), தேனி மாவட்டம் தி.ஆண்டிப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகள் ரிதுஸ்ரீ (18) ஆகியோர் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவியும் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மரக்காணம் அருகே கூனிமேடுகுப்பத்தை சேர்ந்தவர் மோகன், மீனவர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகள்கள். மூத்த மகள் மோனிஷா (18). கடந்த ஆண்டு (2017-18) நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார். டாக்டராக வேண்டும் என்ற ஆசையால் கடந்த ஒரு ஆண்டாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை மோனிஷா எழுதினார். நேற்று முன்தினம் நீட் தேர்வு முடிவு வெளியானதில் மோனிஷா விரக்தி அடைந்தார். யாருடனும் பேசாமல் இருந்த அவரை உறவினர்கள் சமரசம் செய்தனர். ஆனாலும் தொடர்ந்து விரக்தி மனநிலையிலேயே இருந்து வந்தார்.

நேற்று காலை 8 மணியளவில் மோகன் வெளியே சென்றார். தங்கைகளும் பள்ளிக்கு போய்விட்டனர். வீட்டில் மோனிஷா மட்டும் தனியாக இருந்தார். இந்தநிலையில் திடீரென அவர் தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் மோனிஷாவை மீட்டு புதுவை கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு தந்தை மோகன், உறவினர்கள் கதறி அழுதனர்.

மாணவி தற்கொலை குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மோனிஷா தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில், ‘நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்