குடிநீர்குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வேன் சிக்கியது போக்குவரத்து பாதிப்பு

மயிலாடுதுறையில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வேன் சிக்கி கொண்டது. இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-06-06 22:45 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் கச்சேரி சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலைக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குடிநீர் கசிந்து சாலையில் தேங்கி நிற்க ஆரம்பித்தது. இதனை மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தினர் நேற்று முன்தினம் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பணி முடிவு பெறாததால் சாலையில் தோண்டிய பள்ளத்தில் சிறிதளவு மட்டுமே மண்ணை போட்டு மூடி வைத்திருந்தனர். அந்த இடத்தில் வாகனங்கள் சென்றால் ஆபத்து என்பதை குறிக்கும் வகையில் எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை 9 மணியளவில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. சின்னக்கண்ணாரத் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்்கு டிரைவர் வேனை திருப்பியபோது குடிநீர் குழாய் சீர்செய்வதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக வேன் இறங்கி சகதியில் சக்கரம் சிக்கிக் கொண்டது.

மாணவ-மாணவிகள்

இதனால் வேனில் பயணம் செய்த பள்ளி மாணவ- மாணவிகள் அவசர கதவை திறந்து அதன்வழியாக குதித்து வெளியே வந்தனர். இதனால் கச்சேரி சாலையின் குறுக்கே பள்ளி வேன் பள்ளத்தில் சிக்கி கொண்டதால் மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே பள்ளி நிர்வாகம் பள்ளத்தில் சிக்கிய வேனை அகற்றும் பணியில் ஈடுபட்டது. இதனால் கச்சேரி சாலையில் ½ மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்