பொதுமக்களை அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு; முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

பொதுமக்களை அச்சுறுத்தும் ‘நிபா வைரஸ்’ கேரளாவில் வேகமாக பரவி வருகிறது. இதை பரவாமல் தடுக்கும் விதமாக புதுவையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று சுகாதாரத்துறை இயக்குனர் கூறினார்.

Update: 2019-06-06 23:15 GMT
புதுச்சேரி, 

கேரள மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் கடந்த ஆண்டு வேகமாக பரவியது. நோய்க்கான காரணத்தை அறிந்து சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே 17 பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் தற்போது கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் புதுவை யூனியன் பிரதேசத்தின் பிராந்தியமான மாகி இருப்பதால் கேரளாவில் இருந்து மாகிக்கு வருபவர்கள் மூலம் ‘நிபா’ வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அங்கிருந்து மாகி வருபவர்களுக்கு மாகி எல்லையில் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. அத்துடன் அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முக கவசம், கையுறை அணிந்து தான் பணி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தீராத காய்ச்சலுடன் வருபவர்களுக்கு ரத்த பரி சோதனை செய்து வருகின்றனர். இதில் ‘நிபா’ வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் உடனடியாக தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் கோரிமேடு அரசு மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனையிலும் இதற்கென சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். போதுமான தடுப்பு மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு துறையின் இயக்குனர் ராமன் தலைமை தாங்கினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது ‘நிபா வைரஸ்’ பாதிக்கப்பட்ட நபருக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள், ‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் புதுவையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் யாருக்காவது ‘நிபா வைரஸ்’ தாக்கியதற்கான அறிகுறி இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ராமனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

‘நிபா வைரஸ்’ தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு முதலில் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு இருக்கும். நோய் தாக்கியவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும். இது போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். புதுவை மாநிலத்தில் கோரிமேடு அரசு மருத்துவமனை, மற்றும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 2 வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைக்கு இந்த நோய் தாக்கத்துடன் வருபவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் அவர்களுக்கு ‘நிபா’ வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சை அளிக்கப்படும். பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. கேரளாவில் தான் இது அதிகமாக பரவி வருகிறது. எனவே கேரளாவை ஒட்டியுள்ள மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்