போலீஸ்காரர் மர்மமாக இறந்த போதை மறுவாழ்வு மையத்துக்கு ‘சீல்’

போலீஸ்காரர் மர்மமாக இறந்த போதை மறுவாழ்வு மையத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2019-06-06 23:00 GMT
திருச்சி,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர், திருச்சி கே.கே.நகர் அன்பழகன் தெருவில், ‘லைப் அண்ட் கேர் சென்டர்’ என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையத்தை கடந்த 2 ஆண்டுகளாக அரசின் அனுமதியின்றி நடத்தி வந்தார். இந்த மையத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலத்தை சேர்ந்த போலீஸ்காரர் தமிழ்ச்செல்வன்(வயது34) கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அவர் மர்மமாக உயிரிழந்தார். உறவினர்கள், அவரது உடலை பெற்றுச்சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்தனர். அடக்கம் செய்யும் முன்பு அவரது உடலில் காயங்கள் இருப்பதை கண்டு உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி கே.கே.நகர் போலீசில், தமிழ்ச்செல்வன் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த மையத்தில் இருந்த நோயாளிகள் வேறு மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

மேலும் சென்னை அரசு மனநல காப்பக இயக்குனர் அலுவலகம் உத்தரவின்பேரில், டாக்டர் நிரஞ்சனா தேவி தலைமையிலான மருத்துவ குழுவினர் போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்று கடந்த 4-ந் தேதி ஆய்வு செய்தனர். அப்போது, அம்மையம் அரசின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் மையத்தில் உள்ள பதிவேடுகள், நோயாளிகள் விவரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மருத்துவ குழு ஆய்வு செய்தது.

அதே நாளில், கண்டமங்கலத்தில் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் போலீஸ்காரர் தமிழ்ச்செல்வன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலில் இருந்து தோல், முடி, எலும்பு மற்றும் சதை பகுதி உள்ளிட்ட உடற்கூறுகள் டாக்டர்களால் சேகரிக்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள வட்டார தடயவியல் அலுவலகத்திற்கு ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் போதை மறுவாழ்வு மையத்தை பூட்டி விட்டு அதன் உரிமையாளர் மணிவண்ணன் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை கே.கே.நகரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்திற்கு திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குனர் டாக்டர் சம்ஷாத் பேகம் தலைமையில் மாவட்ட மனநல மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முகவேல், வருவாய் ஆய்வாளர் மாலா, கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். அங்கு போதை மறுவாழ்வு மையத்திற்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து எறிந்து விட்டு மருத்துவ அதிகாரி முன்னிலையில் புதிய பூட்டு போட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. இது குறித்து இணை இயக்குனர் டாக்டர் சம்ஷாத் பேகம் கூறியதாவது:-

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த போலீஸ்காரர் ஒருவர் இறந்துபோனதால், மாவட்ட கலெக்டர் சிவராசுக்கு தெரிவிக்கப்பட்டு, அவரது உத்தரவின்பேரில் இன்று(அதாவது நேற்று) ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த மையத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை. எனவே, மைய உரிமையாளர் மணிவண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 மாதங்களாக போதை மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்