நாமக்கல் அரசு கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு

நாமக்கல் அரசு கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

Update: 2019-06-06 22:30 GMT
நாமக்கல்,

நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 13 இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி முதல் மே மாதம் 10-ந் தேதி வரை பெறப்பட்டன.

மொத்தமாக சுமார் 3 ஆயிரம் மாணவிகள் இந்த ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் சுமார் 750 மாணவிகள் இளநிலை படிப்பில் சேர தகுதி பெற்றனர்.

இந்த நிலையில் நேற்று மீதமுள்ள 200 இடங்களை நிரப்ப பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு கல்லூரியில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வுக்கு கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட மாணவிகளின் சான்றிதழ்களை பேராசிரியைகள் சரிபார்த்தனர். பின்னர் தகுதியான மாணவிகளுக்கு சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்