சிகிச்சை பலனின்றி காவலாளி சாவு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

சிகிச்சை பலனின்றி காவலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-06 23:00 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த குண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 51). இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ரகுபதி சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். கடந்த மாதம் 20-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கடந்த மாதம் 31-ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ரகுபதி திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். இது குறித்து அவரது மனைவி சுகுணா அங்கிருந்த நர்சிடம் டாக்டரை அழைத்து காண்பிக்க தெரிவித்துள்ளார். ஆனால் அதிகாலை 2 மணி வரை எந்த டாக்டரும் வந்து ரகுபதிக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரகுபதி ஆஸ்பத்திரியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த ரகுபதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆஸ்பத்திரியின் அலட்சியத்தால் ரகுபதி உயிரிழந்து இருப்பதாக கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆஸ்பத்திரி வாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுபோன்ற பாதிப்பு இனி யாருக்கும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்