கன்னிவாடி அருகே வீட்டில் 25 கிலோ கஞ்சா பதுக்கல் 2 பேர் கைது

கன்னிவாடி அருகே வீட்டில் 25 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-06 22:07 GMT
கன்னிவாடி,

கன்னிவாடி அருகே சுரக்காபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 19). இவருடைய வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அவருடைய வீட்டுக்குள் அதே பகுதியை சேர்ந்த ராஜ் மகன் மனோஜ்குமார் (28) என்பவர் கஞ்சாவை பாக்கெட்டில் வைத்து கொண்டிருந்தார். அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

அப்போது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் ரஞ்சித்குமார் வந்தார். அவரிடம் சோதனை நடத்தி மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். மொத்தம் 25 கிலோ கஞ்சா அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் சுரக்காபட்டியை சேர்ந்த லட்சுமி (30) என்பவர் வீட்டு முன் நின்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்