சாலைப்பணியை தடுத்து நிறுத்திய பொது மக்கள் மணவாளக்குறிச்சியில் பரபரப்பு

மணவாளக்குறிச்சியில் சாலைப்பணியை பொது மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-08 23:00 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சியில் சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்பட்டது. அதில் மணவாளக்குறிச்சி சந்திப்பில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு செல்லும் சாலை மிக மோசமாக இருந்தது. இந்த சாலையில் மணவாளக்குறிச்சியில் உள்ள மத்திய அரசின் அரிய மணல் ஆலை(ஐ.ஆர்.இ.) டிப்பர் லாரிகள் அதிகமாக இயக்கப்படுவதால், அந்த ஆலை நிர்வாகமே சாலையை பராமரித்து வருகிறது. நேற்று சாலையை செப்பனிடும் பணியில் மணல் ஆலை ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது சாலையை தரமாக செப்பனிடவில்லை என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குட்டிராஜன் தலைமையில் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

அவர்கள் தரமான பொருட்களால் சாலைப்பணியை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சாலையை செப்பனிட வேண்டாம் என கோ‌ஷம் போட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மணவாளக்குறிச்சி போலீசார் அங்கு  விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்படவில்லை.

மேலும் பேரூராட்சி அலுலகம் விடுமுறை என்பதால், செயல் அலுவலர் பணிக்கு வரவில்லை. எனவே திங்கட்கிழமை செயல் அலுவலர் வந்தபின் பேசி தீர்வு காணலாம். அதுவரை சாலை பணியை செய்யக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை பணி நிறுத்தப்பட்டது. அங்கு வந்திருந்த பணியாளர்கள் திரும்பி சென்றனர். மணவாளக்குறிச்சியில் சாலைப்பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்