கூடலூர் 8-வது வார்டில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

கூடலூர் 8-வது வார்டில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-08 21:45 GMT
கூடலூர், 

கூடலூர் நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க 8-வது வார்டு காந்திகிராமம் ராஜாகிணறு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் அங்கு குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க கிடங்கு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ஆகியோருக்கு பலமுறை மனு அளித்தனர். இதனால் அங்கு பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்கு மீண்டும் பணிகள் நடந்தது. அப்போது பொதுமக்கள் அந்த பணியை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் குப்பைக்கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரக்கிடங்கு அமைத்தால் பல்வேறு நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையெனில் நாங்கள் அனைவரும் ஆதார்கார்டு, குடும்பஅட்டைகளை (ஸ்மார்ட்கார்டு) நகராட்சியில் ஒப்படைக்க உள்ளோம் என தெரிவித்தனர். இது பற்றி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது உரக்கிடங்கு அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றப் போகிறோம் என அவர் தெரிவித்தார். அதற்கு பொதுமக்கள் எழுத்து மூலமாக எழுதி கொடுக்க வேண்டும் என கேட்டனர். பின்னர் நாளை(திங்கட்கிழமை) நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முன்னிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்