கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை-தர்ணா

கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-06-08 22:45 GMT
நிலக்கோட்டை, 

நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சித்தர்கள் நத்தம் ஊராட்சி மல்லியம்பட்டி கிராமத்தில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்களில் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தாசில்தார் நவநீதகிருஷ்ணனின் அறைக்குள் நுழைந்த பொதுமக்கள் அவர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்களிடம் தாசில்தார் நவநீதகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மல்லியம்பட்டி முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை மீட்டு மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதன் காரணமாகவே தற்போது தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினோம் என்றனர். பின்னர் பேசிய தாசில்தார் நவநீதகிருஷ்ணன், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார். ஆனால் அதில் சமாதானம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் கூறியபடி விரைவில் நடவடிக்கை எடுப்பார் என உறுதியளித்தனர். அதையடுத்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்