பரமத்தி அருகே 2 வீடுகளில் நகை திருடிய பெண் கைது

பரமத்தி அருகே 2 வீடுகளில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-06-08 22:00 GMT
பரமத்திவேலூர், 

பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி மஞ்சமாதா (வயது 26). இவர் கடந்த மாதம் 31-ந்் தேதி வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு வந்த போது, வீட்டினுள் இருந்த பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை திருட்டு ேபானது தெரியவந்தது. இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோல் பரமத்தி அருகே உள்ள கோனூர் கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி சரஸ்வதி (55). இவர் நேற்று வீ்ட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்றார். பின்னர் சரஸ்வதி வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டினுள் இருந்த பீரோ திறந்த நிலையில் கிடந்தது.

அதில் இருந்த 1½ பவுன் நகை திருட்டு போனது அவருக்கு தெரியவந்தது. இது குறித்து சரஸ்வதி பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 வீடுகளில் திருட்டுபோனது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருள்அரசு உத்தரவின்பேரில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி மேற்பார்வையில், பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இது தொடர்பாக கரூர் என்.எஸ்.கே. நகரை சேர்ந்த தர்மராஜ் மனைவி ரமணி (29) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் வீடுகளில் திருடியது தெரியவந்தது.

மேலும் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு அந்த சாவியை கதவுக்கு அருகே வைத்து் செல்வதை நோட்டமிட்டு, அந்த சாவியை எடுத்து வீட்டினுள் சென்று நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சாவியை எடுத்த இடத்திலேயே வைத்து செல்வது தெரியவந்தது.

இவர் கரூர், நாமக்கல் மற்றும் ஈரோடு பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் ரமணி கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து 4½ பவுன் நகை மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்