பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 622 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் 622 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Update: 2019-06-08 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய தாலுகாவில் கடந்த 4-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் தொடர்ந்து ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பட்டா மாறுதல், நத்தம் மனைப்பட்டா, வீட்டுமனை பட்டா, சிட்டா நகல், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வருவாய் கிராம வாரியாக பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு வந்தன. வேப்பந்தட்டை தாலுகாவில் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்த ஜமாபந்தியில், அந்த தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களை சார்ந்த பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 660 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 211 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. 449 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆலத்தூர் தாலுகாவில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களை சார்ந்த பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 271 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 112 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 43 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 116 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

குடிகள் மாநாடு

பெரம்பலூர் தாலுகாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், பெரம்பலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களை சார்ந்த பொதுமக்களிடமிருந்து மொத்தம் 442 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 163 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. 257 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் குன்னம் தாலுகாவில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களை சார்ந்த பொதுமக்களிடமிருந்து மொத்தம் 306 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 136 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. 137 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 33 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.மேலும் இந்த வருவாய் தீர்வாயங்களின் இறுதி நாளான நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் விவசாயிகள் குடிகள் மாநாடு, அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஜமாபந்தியில் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டு, விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றனர். இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடைபெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்