திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு

திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-08 23:30 GMT
திருச்சி,

தமிழகத்தில் இந்தியை 3-வது மொழிப்பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது ஒரு வகையிலான இந்தி திணிப்பு என்று கூறி தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மத்திய அரசு அந்த அறிவிப்பை திரும்ப பெற்றது. தொடர்ந்து, இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக, விருப்பப்படுகிற ஏதாவது ஒரு மொழியை 3-வதாக தேர்ந்தெடுத்து படித்து கொள்ளலாம் என்று தெரிவித்தது.

இந்தநிலையில் இந்திமொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, திருச்சி விமானநிலையத்தின் வெளியே அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி எழுத்துகளும், தலைமை தபால் நிலைய அலுவலகம் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகிய அலுவலகங்களுக்கு வெளியே அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி எழுத்துகளும், தபால் பெட்டிகள் மீது எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளும் மர்ம நபர்களால் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பலகையில் இருந்த தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகள் அழிக்கப்படவில்லை. நேற்று காலை இதனை கண்ட விமானநிலைய ஊழியர்கள் மற்றும் தலைமை தபால் நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் மற்றும் விமானநிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இந்தி எழுத்துகளை அழித்த மர்ம நபர்கள் யார்? என அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அதிகாலை நேரத்திலேயே மர்ம நபர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆனால் அவர்கள் யார்?. ஏதேனும் அமைப்பை சேர்ந்தவர்களா?. தமிழ் ஆர்வலர்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்