வறட்சி பகுதிகளை ஆய்வு செய்வதாக எடியூரப்பா நாடகமாடுகிறார் போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் குற்றச்சாட்டு

வறட்சி பகுதிகளை ஆய்வு செய்வதாக எடியூரப்பா நாடகமாடுகிறார் என்று போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் குற்றம்சாட்டினார்.

Update: 2019-06-09 23:00 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் 170-க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. வறட்சியை பணிகளை மேற்கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாவட்ட பொறுப்பு மந்திரிகள் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு செல்வதில்லை என்றும் பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

இந்த நிலையில் பாகல்கோட்டை, கொப்பல் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதித்த பகுதிகளில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா ஆய்வு செய்தார்.

இதுகுறித்து போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் நேற்று பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா வறட்சி பகுதிகளை ஆய்வு செய்வதாக நாடகமாடுகிறார். இன்னும் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் அவர் வறட்சி பகுதிகளை ஆய்வு செய்கிறார். இத்தனை நாட்களாக எடியூரப்பா எங்கே இருந்தார்.

கூட்டணி அரசு அமைந்த நாள் முதல் ஆபரேஷன் தாமரையில் மூழ்கியிருந்த எடியூரப்பாவுக்கு இப்போது திடீரென வறட்சி மீது கவனம் வந்துள்ளது. ஆபரேஷன் தாமரை தோல்வி அடைந்துவிட்டதால், எடியூரப்பா வறட்சி பகுதிகளை ஆய்வு செய்வதாக நாடகமாடுகிறார். மக்கள் அவருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த அரசு ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யும். வறட்சி நிவாரண பணிகள் சரியான முறையில் நடந்து வருகின்றன. பா.ஜனதாவினர் தேவை இல்லாமல் குற்றம்சாட்டுகிறார்கள். அரசியல் மாயாஜாலத்தில் ஈடுபட்டுள்ளனர். இது மக்களிடம் எடுபடாது.

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.

மேலும் செய்திகள்