மும்பையில் கடந்த 7 ஆண்டுகளில் தீ விபத்துகளில் சிக்கி 300 பேர் பலி தீயணைப்பு துறை தகவல்

மும்பையில் கடந்த 7 ஆண்டுகளில் நடந்த தீ விபத்துகளில், 300 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது.

Update: 2019-06-09 22:15 GMT
மும்பை,

மும்பையில் கடந்த சில ஆண்டுகளாகவே குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாக கட்டிடங்களில் தீ விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதற்கு அலட்சியம் தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2018 வரை 7 ஆண்டுகளில் மும்பையில் தீ விபத்துகள் தொடர்பாக தீயணைப்பு படைக்கு 29 ஆயிரத்து 868 அழைப்புகள் வந்து உள்ளன.

இவற்றில் பெரியளவில் நடந்த தீ விபத்துகளில் 300 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது. இவர்களில் 196 பேர் ஆண்கள், 97 பேர் பெண்கள், 7 பேர் தீயணைப்பு படை அதிகாரிகள் ஆவர்.

2012-13-ம் ஆண்டில் நகரில் ஏற்பட்ட தீ விபத்துகளில் 62 பேரும், 2013-14-ம் ஆண்டில் 58 பேரும், 2014-15-ம் ஆண்டில் 33 பேரும், 2015-16-ம் ஆண்டில் 52 பேரும், 2016-17-ம் ஆண்டில் 35 பேரும், 2017-18-ம் ஆண்டில் 55 பேரும் தீ விபத்துகளில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

7 ஆண்டுகளிலும் ஏற்பட்ட தீ விபத்துகளில் மொத்தம் ரூ. 68 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் சேதம் அடைந்து உள்ளன. இந்த தகவலை மும்பை தீயணைப்புத்துறை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்