மயானத்திற்கு சாலை வசதி கேட்டு வாரப்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம்

வாரப்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு மயானத்திற்கு சாலை வசதி கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-10 23:00 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வாரப்பூர் ஊராட்சியில் பொன்னகண்ணிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பண்டாரம் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் பொது மயானம் ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மயானத்திற்கு முறையான சாலை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு எடுத்து செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் இதை கண்டித்து வாரப்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு 10-ந்தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாக கடந்த 6-ந்தேதி அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் அறிவித்திருந்தனர். இதன்பிறகும் அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.

உண்ணாவிரதம்

இதையடுத்து நேற்று பண்டார சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி முனியப்பன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தற்போது ஜமாபந்தி நடைபெறுவதால், வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் வர இயலாது. எனவே அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்