தீவுகளை சுற்றிலும் மிதவைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மீனவர்கள் தர்ணா

தீவுகளை சுற்றிலும் மிதவைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-10 22:45 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் யூனியன் தலைவர் பால்ச்சாமி தலைமையில் பாம்பன் பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளை நம்பி 100 மீனவ கிராமங்களை சேர்ந்த 1½ லட்சம் மீனவர்கள், மீனவ பெண்கள் மீன்பிடித்தல், பாசி சேகரித்தல் போன்ற தொழில்களை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். 2000–ம் ஆண்டில் மன்னார் வளைகுடா தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. அதனால் 21 தீவு பகுதிகளில் மீனவர்களை தொழில் செய்யவிடாமல் தடுத்தனர். மீனவர்களின் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைக்கு பின்பு 2014–ம் ஆண்டு முதல்–அமைச்சரின் ஆணைக்கிணங்க மீனவர்கள் பாசி சேகரிக்க அடையாள அட்டை வழங்கப்பட்டு இதுவரை மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

தற்போது வனத்துறையினர் மீனவ மக்களிடம் எந்த முன்னறிவிப்பும் இன்றி தீவு பகுதிகளை சுற்றுலாதலமாக மாற்றி கடலில் மிதவைகளை அமைத்துள்ளனர். இதனால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் அப்பகுதிக்குள் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து அகதிகளை போல வாழ நேரிடும். எனவே மாவட்ட நிர்வாகம் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடி தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்