நாயுடுமங்கலத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தை மகளிர் சுயஉதவி குழுவினர் முற்றுகை

நாயுடுமங்கலத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தை மகளிர் சுயஉதவி குழுவினர் முற்றுகையிட்டனர்.

Update: 2019-06-10 22:15 GMT
கலசபாக்கம், 

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் கலசபாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நாயுடுமங்கலம் மற்றும் சுற்றியுள்ள ஆர்ப்பாக்கம், கமலபுத்தூர், துரிஞ்சாபுரம், தேவனாம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பெண்களிடம் நேரடியாக சென்று தனிநபருக்கு ரூ.50 ஆயிரம் கறவை மாடு கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு 15 முதல் 25 பெண்கள் ஒன்றாக இணைந்து மகளிர் குழுக்களை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கட்டி முடித்து விட்டால் அடுத்து ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதையடுத்து நாயுடுமங்கலம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டது. அவர்களிடம் முதல் கட்டமாக 50-க்கும் மேற்பட்ட மகளிர் குழுவை சேர்ந்த பெண்களிடம் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு குழுவில் உள்ளவர்களிடம் தலா ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணமாக வசூல் செய்து அவர்களுடைய ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கொண்டு வந்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டு, அவர்களிடம் வெறும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டு ஒரு மாதத்தில் தலா ரூ.50 ஆயிரம் கறவை மாடு கடன் தருவதாக கூறியுள்ளார்.

9 மாதங்களாக காத்திருந்த மகளிர் சுய உதவி குழுவினர் நேற்று நாயுடுமங்கலத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தை முற்றுகையிட்டு உரிமையாளர் மஞ்சுளாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் எங்களுக்கு கடன் எதுவும் வேண்டாம் எங்களிடம் வாங்கிய ஆவணங்களை திரும்பி கொடுக்கும்படி கேட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் செய்து பணம் மற்றும் ஆவணங்களை பெற்று தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மகளிர் சுய உதவி குழுவினர் கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்