திருப்பூரில், பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து - துணிகள் எரிந்து நாசம்

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் துணிகள் எரிந்து நாசமாகின.

Update: 2019-06-10 23:00 GMT
திருப்பூர், 

திருப்பூர் கொங்குநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் பாலகுருநாதன் (வயது 53). இவர் அந்த பகுதியில் பின்னலாடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 2 மாடி கட்டிடம் கொண்டது.

இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியை குடோனாகவும், மாடியை நிறுவனமாகவும் அவர் பயன்படுத்தி வந்தார். மாடியில் உள்ள ஒரு அறையில் மாதிரி ஆடைகளை வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 2-வது மாடியில் மாதிரி ஆடைகள் வைத்திருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. மேலும், அங்கு இருந்து கரும்புகையும் வெளியேறியது. இதனால் நிறுவனத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மாதிரி ஆடைகள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்