சொத்து வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நாளை மறுநாள் நடக்கிறது

சொத்து வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க.வினர் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

Update: 2019-06-11 21:30 GMT
தூத்துக்குடி, 

சொத்து வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க.வினர் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சொத்து வரி உயர்வு 

அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் எந்தவித அத்தியாவசிய பணிகளும் நடைபெறவில்லை. குறிப்பாக குடிநீர் வழங்குவதை முறைப்படுத்துதல், கழிவுநீர் கால்வாய் தூர்வாராமல் இருப்பது, தெருவிளக்கு, சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை.

மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசு அலுவலர்கள் மூலம் தூத்துக்குடி பழைய நகராட்சி பகுதி மற்றும் மாநகராட்சியோடு இணைந்த ஊராட்சி பகுதிகளுக்கான சொத்துவரி, குடிநீர் கட்டணம், குப்பைவரி என பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள்.

ஏற்கனவே 2017, 2018–ம் ஆண்டுக்கான பழைய வரித்தொகையை செலுத்தியவர்களும் கூடுதலாக புதிய வரி கட்ட வேண்டும் என நோட்டீஸ் வழங்கி உள்ளனர். பலமடங்கு வரி உயர்த்தியதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

ஆர்ப்பாட்டம் 

ஆகையால் பலமடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி டூவிபுரம் 5–வது தெரு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை தாங்குகிறார்.

எனவே மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் மற்றும் ஊராட்சி கழக செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்