மீன்பிடி தடைக்காலம் முடிய 2 நாட்களே உள்ளதால் நாகையில், படகுகளை சீரமைக்கும் பணி தீவிரம்

மீன்பிடி தடைக்காலம் முடிய 2 நாட்களே உள்ளதால் நாகையில் மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2019-06-11 23:00 GMT
நாகப்பட்டினம்,

தமிழக கடலோர மாவட்டங்களின் மீன்பிடி தடைக்காலம்கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை அமலில் உள்ள இந்த மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள், இழுவை படகுகள் ஆகியவை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கூடாது என மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதை தொடர்ந்து நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள இரும்பு கம்பிகளில் உப்பு காற்றினால் ஏற்பட்டுள்ள பழுதை வெல்டிங் செய்து சரி செய்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பொதுவாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் சுமார் ஒரு வாரகாலம் கடலில் தங்கி மீன்பிடித்து வருவார்கள். அப்போது பிடிக்கப்படும் மீன்களை ஐஸ் வைத்து பதப்படுத்துவார்கள். இதனால் நாகையில் ஐஸ் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெறும். தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் ஐஸ் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நாகை மீனவர்கள் கூறியதாவது:-

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்தி உள்ளது. மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதற்கு இது உகந்த காலம் இல்லை. எனவே, மீன்பிடி தடைக்காலத்தை இயற்கை சீற்றம் உருவாக கூடிய அக்டோபர், நவம்பர் மாதங்களில் மாற்றி அமைக்க வேண்டும்.

இது குறித்து மீனவர்கள் தமிழக அரசுக்கு கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். இதுதொடர்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், புயல் காலங்களில் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்துவதன் மூலம் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட் சேதங்களை தவிர்க்க முடியும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு பதிலாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதை மாற்றி அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார். எனவே அமைச்சர் அறிவித்தபடி மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறாம்.

இவ்வாறு மீனவர்கள் கூறினார்.

மேலும் செய்திகள்