ராசிமணலில் அணை கட்டும் வரை போராடுவோம் தஞ்சையில், பி.ஆர். பாண்டியன் பேச்சு

ராசிமணலில் அணை கட்டும் வரை போராடுவோம் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Update: 2019-06-11 23:00 GMT
தஞ்சாவூர்,

பூம்புகாரில் இருந்து கல் எடுத்து ராசிமணல் நோக்கி காவிரிக்கு மாற்று காவிரியே, ராசிமணலில் அணை கட்டுவோம் என்கிற விழிப்புணர்வு பயணத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 10-ந்தேதி பூம்புகாரில் இருந்து தொடங்கினர்.

இப்பயணம், திருவாரூர், நீடாமங்கலம் வழியாக தஞ்சாவூருக்கு நேற்று மதியம் வந்தது. தஞ்சை வந்த பயணத்துக்கு ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கத் தலைவர் த. புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), நீலமேகம் (தஞ்சாவூர்), அ.ம.மு.க. பொருளாளர் ரெங்கசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், மூத்த வேளாண் வல்லுனர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பயணத்தில் வந்த சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேசியது:-

காவிரியும், டெல்டாவும் வறண்டு கிடக்கிறது. மேட்டூர் அணையும் விரைவில் வறண்டு விடும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் உணவு களஞ்சியமான காவிரி டெல்டா வானம் பார்த்த பூமியாக மாறி வருவது வேதனை அளிக்கிறது. எனவே, ராசிமணலில் அணைக்கட்டுவது தொடர்பான கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

ராசிமணல் பகுதியில் காவிரியின் இடது கரை தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது. வலது கரை கர்நாடகத்தை சேர்ந்தது. ஒகேனக்கலில் இருந்து பிலிகுண்டு 10 கி.மீ. தொலைவிலும், அங்கிருந்து 8-வது கி.மீ. தொலைவில் ராசிமணலும் உள்ளது. ராசிமணலிலிருந்து 42 கி.மீ. தொலைவில் மேகதாது அமைந்துள்ளது.

ராசிமணல் பகுதியில் அணை கட்டினால் தண்ணீரை மேகதாது வரை தேக்கி வைப்பதற்கு இயற்கையாகவே இரு புறமும் மலை உள்ளது. எனவே, ராசிமணலில் அணைக் கட்டினால் உபரி நீரைத் தேக்கி வைக்க நிறைய வாய்ப்புள்ளது.

காவிரியில் உபரி நீரைப் பொருத்தவரை தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். அதைத் தேக்கி வைப்பதற்கு நமக்கு எந்தவிதசட்ட விதிமீறலும் கிடையாது. எனவே, ராசிமணலில் அணை கட்டுவதற்கு சட்ட அனுமதி இருக்கிறது. இவ்வளவு பெரிய தொழில்நுட்பத்தை முன்மொழிந்தவரே காமராஜர்தான். இத்திட்டத்துக்காக அங்கு 1961-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டியுள்ளார். அந்த அடிக்கல் இப்போதும் இருக்கிறது. அதன் பிறகு அரசியல் மாற்றம் காரணமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோதாவரி- காவிரி இணைப்பால் காவிரி டெல்டாவை பாதுகாக்க முடியாது. ஏற்கனவே கிருஷ்ணா நீரால் நமக்கு பயனில்லை. காவிரி நீர் மூலம்தான் குடிநீர் தேவையை நிறைவு செய்யப்படுகிறது. காவிரிக்கு மாற்று காவிரியே. எனவே, ராசிமணலில் அணை கட்டியே தீருவோம். அதுவரை போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயணம் ஒகேனக்கல் வழியாக ராசிமணலில் இன்று (புதன்கிழமை) நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்