திருச்சி தனியார் பள்ளியில் விபரீதம்: விளையாடியபோது தவறி விழுந்த மாணவி சாவு உறவினர்கள் முற்றுகை போராட்டம்

திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாடியபோது தவறி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2019-06-11 23:15 GMT
திருச்சி,

திருச்சி உறையூர் குழுமணி ரோடு டாக்டர் பங்களா பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்-சங்கீதா தம்பதி. ராம்குமார் பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் பெயர் இலக்கியா(வயது 13). உறையூரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 7-ந் தேதி பள்ளிக்கு சென்ற இலக்கியா, அங்கு மாலையில் விளையாட்டு வகுப்பில் பங்கேற்பதற்காக பள்ளியின் மாடிப்பகுதி வகுப்பறையில் இருந்து படிக்கட்டில் உள்ள கைப்பிடி கம்பியில் வழுக்கியவாறு கீழே வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மாணவி தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

கோமா நிலைக்கு சென்ற மாணவி

இதைப்பார்த்த சக மாணவிகள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் மாணவியை உடனடியாக சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் பள்ளியிலேயே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மாணவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டதில் மாணவி இலக்கியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ரத்தம் உறைந்து அவர் கோமா நிலைக்கு சென்றது தெரியவந்தது. அதன் பிறகே மாணவியின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கலெக்டரிடம் புகார்

அதைக்கேட்டு மாணவியின் பெற்றோர் பதறியடித்து கொண்டு ஓடி வந்தனர். தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கைவிரித்த நிலையில், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே, பள்ளி நிர்வாகம் மாணவியின் நலனில் அக்கறை செலுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டதால் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவிகளுக்கு அப்பள்ளியில் உரிய பாதுகாப்பு இல்லை என்றும், அஜாக்கிரதையாக செயல்பட்ட ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவிடம் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த மாணவி இலக்கியா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் உடலை பார்த்து துக்கம் தாங்காமல் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

மேலும் மாணவி இறந்த தகவல் அறிந்ததும் திருச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு மாணவியின் உறவினர்கள் ஏராளமானோர் கூடினர். பின்னர் மாணவி உடல், பிரேத பரிசோதனைக்காக பிரேத கூடத்திற்கு அனுப்பப்பட்டது.

பின்னர் உறையூரில் உள்ள தனியார் பள்ளியை பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அங்கு ஏற்கனவே மாணவி இறந்த தகவல் தெரிந்து பள்ளிக்கு ஆசிரியர்களோ, நிர்வாகத்தினரோ வரவில்லை. இதனால், வெகுண்டெழுந்த பெற்றோர், தங்களது உறவினர் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அலட்சியப்போக்கு

அப்போது போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில்,‘மாணவி இலக்கியா சாவுக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே காரணம். காயம் அடைந்த மாணவியை உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லாமல் பள்ளியிலேயே 2 மணிநேரம் வைத்துள்ளனர். இதனால், மாணவி கோமா நிலைக்கு சென்று உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி நிர்வாகத்தினர் மீதும், ஆசிரியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அதற்கு போலீஸ் தரப்பில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்க கூறினர். பின்னர் போலீசில் புகார் கூறப்பட்டது. போலீசார் மாணவி இலக்கியா சாவில் சந்தேகம் உள்ளதாக இ.பி.கோ. சட்டப்பிரிவு 174-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக கிடைத்த பின்னரே சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா? வேண்டாமா? என்ற முடிவுக்கு வரமுடியும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்