கறம்பக்குடி அருகே முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

கறம்பக்குடி அருகே முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-06-11 23:00 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, அருகே உள்ள ராங்கியன்விடுதி கூத்தூரணிக்கரையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சக்தி விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் கடந்த 3-ந்தேதி திருவிழாவும் நடைபெற்றது.

முத்துமாரியம்மன் கோவிலில் முன்பு இரும்பு பெட்டகத்தால் ஆன பெரிய உண்டியலும், விநாயகர், முருகன் சன்னதிகளில் சில்வர் தகடுகளால் ஆன உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கோவில் உண்டியல்கள் திறக்கப்படவில்லை.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இந்நிலையில், நேற்று காலை கோவில் பூசாரி பூஜை செய்வதற்காக கோவிலை திறக்க வந்தார். அப்போது அங்கு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இருந்து 3 உண்டியல்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்து பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். இதுகுறித்து கோவில் பூசாரி தங்கராசு கறம்பக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல்களை உடைத்து பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்