உரம் தயாரிப்பு மையத்தை மூடக்கோரி மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சேலத்தில் உரம் தயாரிப்பு மையத்தை மூடக்கோரி மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-11 23:00 GMT
சேலம்,

சேலம் பெரமனூர் கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள டி.வி.எஸ். சுடுகாடு அருகே மாநகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண்உயிரி உரம் தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டது. வீணாகும் உணவு பொருட்கள், அழுகிய காய்கறிகள், பழங்களை கொண்டு இங்கு உரம் தயாரிக்கும் பணி நடந்தது.

இதனிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இந்த மையத்தில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் பலருக்கு தொற்றுநோய் பரவுவதாகவும் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த மையம் மூடப்பட்டது.

பொதுமக்கள் முற்றுகை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த உரம் தயாரிக்கும் மையம் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டு பணி தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே இந்த மையத்தை பார்வையிடுவதற்காக நேற்று காலை மாநகர் நல அலுவலர் பார்த்திபன், சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திரண்டு வந்த அந்த பகுதி பொதுமக்கள், இந்த மையத்தை மூடக்கோரி திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் மற்றும் பள்ளப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆணையாளரிடம் மனு கொடுங்கள்

அப்போது அதிகாரிகள் பொதுமக்களிடம், நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தை மூட வேண்டும் என்ற உங்களுடைய கோரிக்கையை மாநகராட்சி ஆணையாளரிடம் மனுவாக எழுதி கொடுங்கள் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து கொண்டனர்.

முன்னதாக இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, ‘இந்த நுண்உயிரி உரம் தயாரிப்பு மையத்தை மூடக்கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தநிலையில் நேற்று(நேற்று முன்தினம்) 50-க்கும் மேற்பட்ட போலீசாருடன் வந்து எங்களை மிரட்டி உரம் தயாரிப்பு மையத்தை மீண்டும் திறந்து பணியை தொடங்கினர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் வீட்டில் வசிக்க முடியவில்லை. எனவே இந்த மையத்தை மூடுவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். 

மேலும் செய்திகள்