அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக கூறி மின்வாரிய அலுவலகம் முற்றுகை

அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக கூறி மின்வாரிய அலுவலகத்தை கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

Update: 2019-06-11 22:15 GMT
திருப்பூர்,

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை நாம் தமிழர் கட்சியினர், திருப்பூர் மேட்டுபாளையத்தில் உள்ள மி்ன்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, மேற்பார்வை பொறியாளரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வஞ்சிபாளையம் தாந்தோனியம்மன் நகரை சேர்ந்த எங்களது உறுப்பினர் வேலுச்சாமி வீட்டு மின் இணைப்பு பெற்றுள்ளார். அவருக்கு கடந்த 24-04-2019 அன்று வைப்புத்தொகையாகவும், அரியர்ஸ் தொகையாகவும் ரூ.6,005 செலுத்துமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த தொகை எதற்கு என அவர் விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் விளக்கம் கேட்டு கடந்த 8-ந் தேதி மின்வாரிய அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இதன் பேரில் பதில் கடிதம் அனுப்பிய மின்வாரிய அலுவலர் மின்வாரிய விதி எண் 11(2) எனும் விதியை சுட்டிகாட்டி உள்ளார். இந்த விதி என்ன என்பது குறித்து எங்களது உறுப்பினருக்கு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் எலியாஸ் என்பவர் மின்கட்டையை பிடுங்க வீட்டிற்கு வந்துள்ளார். இது மின்வாரிய விதிகளுக்கு புறம்பான செயல் ஆகும். எனவே அரியர்ஸ், வைப்புத்தொகை எனக்கூறி சட்டவிரோதமாக அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதை கண்டிக்கிறோம்.

இதனை நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்