குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நீண்ட நாளைய திட்டம் அரசிடம் இல்லை கே.எஸ்.அழகிரி பேட்டி

குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நீண்ட நாளைய திட்டம் தமிழக அரசிடம் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2019-06-11 23:00 GMT
திருவண்ணாமலை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திருவண்ணாமலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். ஆண்டாள் சிங்காரவேலன் மண்டபத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக நீண்ட நாளை திட்டங்கள் எதுவும் எடப்பாடி அரசாங்கத்திடம் இல்லை. கோடை காலத்திலேயே எல்லா குளங்களையும், ஏரிகளையும் ஒரு மீட்டர் ஆழப்படுத்தினால் மழை காலங்களில் 2 மடங்கு தண்ணீர் சேமிக்க முடியும் என்ற கருத்தை நாங்கள் சென்ற ஆண்டே வைத்தோம். ஆனால் மாநில அரசாங்கம் அதை செய்யவில்லை. லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்கிறார்கள். அது கூட லாபம் கருதி தான். எனவே குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும். மேலும் இந்த பிரச்சினைக்கு அவர்கள் என்ன செய்து இருக்கிறார்கள் என்று ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

நீட்தேர்வு பிரச்சினை

நீட் தேர்வை பொருத்தவரை தமிழக மாணவர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரியில் இடம் தர வேண்டும். அது தான் சமூக நீதி.

காவிரி மேலாண்மை வாரியம் கூடி தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க உத்தரவிடுகிறார்கள். ஆனால் கர்நாடக அரசாங்கம் தண்ணீர் தர வில்லை. இதற்கு மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க.பிரச்சினை

அ.தி.மு.க.வில் நடைபெறும் பிரச்சினை என்பது அவர்களது சொந்த பிரச்சினை. ஆனால் அவர்களது சொந்த பிரச்சினையால் தமிழகத்தில் ஒரு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் ஒற்றுமையாக மத்திய அரசை அணுகி இருந்தால் ஒன்று அல்லது 2 அமைச்சர்களை பெற்று இருக்கலாம். அதன் மூலம் தமிழகத்திற்கு சில நன்மைகள் கிடைத்து இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மணிவர்மா தலைமையில் நிர்வாகிகள் பாபுநந்தகுமார், செந்தில்குமார்ரெட்டி, தனகோட்டி உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார், ஆரணி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஷ்ணுபிரசாத் முன்னிலை வகித்தார். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்