ஜானகிராமனின் பொதுப்பணிகள் பாராட்டத்தக்கது - நாராயணசாமி புகழாரம்

மறைந்த ஜானகிராமனின் பொதுப்பணிகள் பாராட்டத்தக்கது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி புகழாரம் சூட்டினார்.

Update: 2019-06-11 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமனின் இறுதி சடங்கில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு புதுவை அரசு சார்பில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமன் பிறந்து வளர்ந்த கிராமத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவினை தொடர்ந்து புதுவை அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அவர் சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்தார். எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்–அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என பல பதவிகளை வகித்துள்ளார். சிறு வயதிலேயே தி.மு.க.வில் சேர்ந்து கருணாநிதியின் சீடனாக இருந்து அவருக்கு பணிபுரிந்து வளர்ந்து வந்தவர். அவருடைய பொதுப்பணிகள் பாராட்டத்தக்கது.

ஏழை, எளியவர்களுக்காக ஏராளமான திட்டங்களை கொண்டுவந்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். அதனால்தான் அவரும் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடைசியாக 2 ஆண்டுகள் நோய்வாய் பட்டிருந்ததால் தீவிர அரசியலில் ஈடுபடாவிட்டாலும் தி.மு.க.வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வந்தார். அவரது இழப்பு புதுச்சேரிக்கு பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது மறைவு காரணமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனிதசங்கிலி போராட்டத்தையும் ஒத்தி வைத்துள்ளோம். அதை மீண்டும் எப்போது நடத்துவது? என்று மீண்டும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினருடன் கலந்துபேசி முடிவெடுப்போம்.

ஜானகிராமன் மறைவினையடுத்து அரசு விடுமுறை அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் ஏற்கனவே முன்னாள் முதல்–அமைச்சர்களான ராமசாமி, சண்முகம் ஆகியோர் மறைந்தபோது விடுமுறை அளிக்கப்படவில்லை. அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் மட்டுமே செய்யப்பட்டது. அந்த நடைமுறையே இப்போதும் கடைபிடிக்கப்பட்டது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்