தொரப்பாடியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

வேலூர் தொரப்பாடியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 8 பவுன் சங்கிலியைபறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-06-11 22:34 GMT
வேலூர்,

வேலூர் தொரப்பாடி எழில்நகரை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி நவநீதம் (வயது 62). இருவரும் பள்ளியி்ல் தலைமைஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலையில் நவநீதம், அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நவநீதம் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த மர்மநபர் நவநீதம் கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலியை பறித்தார். சுதாரித்துக்கொண்ட நவநீதம் சங்கிலியை பறிக்க விடாமல் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர் சங்கிலியை வேகமாக இழுத்தார். அதில் அவரது கையில் 8 பவுன் சிக்கிக் கொண்டது. நவநீதம் கையில் 2 பவுன் சிக்கிக் கொண்டது.

8 பவுனுடன் மர்மநபர் அங்கிருந்து மின்னல் வேகத்தி்ல் தப்பிச் சென்று விட்டார். இது குறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர். சமீப காலமாக தொரப்பாடி பகுதியில் தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், எனவே போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்