ஒரே ஊரில் 2 தொகுதிகள் வருவதால் பணிகள் நிறைவேறுவதில் குழப்பம்

ஆரணி அருகே நடுப்பட்டு கிராமத்தில் ஒரு பகுதி ஒரு சட்டசபை தொகுதியிலும் மற்றொரு பகுதி் வேறொரு தொகுதியிலும் உள்ளதால் இதனை தனி ஊராட்சியாக மாற்ற வேண்டும் என கருத்து கேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.

Update: 2019-06-12 22:45 GMT
ஆரணி, 

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக பிரிக்க வலியுறுத்தி கலெக்டரிடம் கிராம பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். அதற்கான காரணங்களையும் அவர்கள் விளக்கியிருந்தனர்.

இதனை தொடர்ந்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று காலை நடுப்பட்டு கிராமத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா, மாவட்ட உதவி இயக்குனர்கள் அரவிந்தன், சாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.சவிதா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவுத் துறை பதிவாளர் பிரேம் வரவேற்றார்.

முகாமின்போது பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் ஊராட்சி விண்ணமங்கலமும், கோனையூரும் இணைந்துள்ள ஊராட்சி ஆகும். இவை முறையே பெரணமல்லூர், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கி உள்ளது.

விண்ணமங்கலம் ஊராட்சியில் நடுப்பட்ட கிராமத்தில் மக்கள் தொகை அதனை விட குறைந்தள்ளது. எனவே அரசு நிதி விண்ணமங்கலத்திற்ேக சென்று விடுகிறது. அந்த ஊரிலேயே பணிகள் நடக்கின்றன. ஆனால் எங்கள் ஊரில் சரிவர பணிகள் நடப்பதில்லை.

எங்கள் ஊரில் 3 தெருக்கள் கோனையூர் ஊராட்சியிலும், 2 தெருக்கள் விண்ணமங்கலம் ஊராட்சியிலும் இருப்பதால் எங்கள் ஊர் தேவையை எந்த ஒன்றியம் நிறைவேற்றும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அரசு சான்றுகள் பெற ஒரு பிரிவினர் சேத்துப்பட்டிற்கும், மற்றொரு பகுதியினர் ஆரணிக்கும் சென்றுவரும் நிலை உள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலக வேலைஎன்றால் ஆரணிக்கும், பெரணமல்லூருக்கும் செல்லும் நிலை உள்ளது.

மேலும் ஒரு தெருவில் உள்ளவர்கள் போளூர் தொகுதிக்கும் மற்றொரு தெருவில் உள்ளவர்கள் ஆரணி தொகுதிக்கும் வாக்களிக்கும் நிலை உள்ளது. 61 ஆண்டுகளாக இதே நிலை உள்ளதால் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. அரசால் இனியாவது ஒரு பஞ்சாயத்திற்கு வழங்கப்படுகிற முழுத் தொகையும் எங்கள்கிராமமக்களே பயனடைய வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசுகையில், 61 ஆண்டுகளாக இந்த பிரச்சினை உள்ளதால் அது குறித்த குழப்பத்தை இங்கு தெரிவித்துள்ளார்கள். இப்போதுதான் இந்த பிரச்சினையே எனக்கு தெரிய வருகிறது. அரசுக்கு தெரிவித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதன் முடிவினை மேற்கு ஆரணிஊராட்சி ஒன்றியத்தில் நடுப்பட்டு தனிஊராட்சியாக உருவாக்கிட அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இது குறித்து அடுத்த கட்ட கூடடமும் நடத்தப்படும் என்றார்.

கூட்டத்தில் ஆரணி தாசில்தார் தியாகராஜன், ஆரணி வருவாய் ஆய்வாளர் ஜெயராமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முன்னாள்ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கொடிகாளிதாஸ், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், கூட்டுறவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்