நாமக்கல்லில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல்லில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை கலெக்டர் ஆசியா மரியம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2019-06-12 23:00 GMT
நாமக்கல்,

குழந்தை தொழிலாளர் ஒழிப்புதின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் பரமத்தி சாலை, உழவர்சந்தை, மணிக்கூண்டு, திருச்சிரோடு, பி.எஸ்.என்.எல். அலுவலகம் வழியாக மீண்டும் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வந்தடைந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

முன்னதாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், தொழிலாளர் உதவி ஆணையர் மாதேஸ்வரன், துணை ஆய்வாளர் திருஞானசம்பந்தம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அந்தோணி ஜெனிட், நாமக்கல் தாசில்தார் சுப்பிரமணியம் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்