புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிறந்து 27 நாட்களே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிறந்து 27 நாட்களே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Update: 2019-06-12 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த இளங்கோவன்-கவுரி தம்பதியின் மகள் நேகாஸ்ரீ. பிறந்து 27 நாட்களே ஆன நேகாஸ்ரீக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மே மாதம் 29-ந் தேதி அனுமதிக்கப்பட்டது. குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது நுரையீரலில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக அந்த குழந்தைக்கு மயக்க மருத்துவரும், மருத்துவமனை முதல்வருமான அழ.மீனாட்சிசுந்தரம் மயக்க மருந்து செலுத்தினார். குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்ரமணியன், ரத்தநாளஅறுவை சிகிச்சை நிபுணர் முரளி ஆகியோர் கடந்த 1-ந் தேதி அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சையின் போது இடது நுரையீரலில் மேல்பக்க பகுதி இயங்காமல் காணப்பட்டதால் அது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

காற்று அகற்றம்

அறுவை சிகிச்சையின் மறுநாள் வலது பக்க நுரையீரல் அதிக அளவு விரிந்து இடது பக்கத்திற்கு நகருவது காணப்பட்டதால் எக்ஸ்ரே மூலம் குழந்தையை பரிசோதித்தபோது வலது பக்க நுரையீரலின் வெளிப்பகுதியில் காற்று புகுந்திருப்பது கண்டறியப்பட்டது.

எனவே, அதற்கு ஒரு வடிகுழாய் பொருத்தி அந்த காற்று அகற்றப்பட்டு 2 நாட்கள் குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இதன்மூலம் குழந்தை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது.. நேரடியாக தாய்ப்பால் எடுக்கும் வண்ணம் குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.மீனாட்சிசுந்தரம் கூறுகையில், சவாலான இந்த அறுவை சிகிச்சையை அரசு மருத்துவ குழுவினர் மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றிருப்பது சாதனையாகும். தனியார் மருத்துவமனைகளில இதற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும் என்றார்.

மேலும் செய்திகள்