‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க பஸ், ரெயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை; சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தகவல்

‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க பஸ், ரெயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-12 23:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கடலூரை சேர்ந்த ஒருவர் ‘நிபா’ வைரஸ் அறிகுறியுடன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் பற்றிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலகத்தில் எனது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அரசு பொது மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி, ஜிப்மர் மருத்துவமனை நிபுணர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதுவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. வெளியூரில் இருந்து புதுவைக்கு வரும் பயணிகளுக்கு பஸ்நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு மற்றும் சுகாதாரத்துறை நோய் தடுப்பு துறை, கால்நடை நலத்துறை இணைந்து ‘நிபா’ வைரஸ் தடுப்புக்கு துரிதமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

விலங்குகள் கடித்த பழங்களை உண்ணாமல் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து சமைத்து சாப்பிட வேண்டும். அசைவ உணவுகள் முக்கியமாக பன்றி இறைச்சியை சுத்தம் செய்து சமைத்து உண்ண வேண்டும். கைகளை நன்கு கழுவினால் நோய்கள் பரவாமல் தடுக்கலாம். முக்கியமாக இறைச்சியை கையாளும் போது கவனம் செலுத்துதல் வேண்டும். சுத்தம் மற்றும் சுகாதாரம் நோய் பரவுவதை தடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்